Tuesday, December 12, 2006

கதைக்கின்றேன் என்றாய்.......

உறக்கம் கொள்ளவில்லை உற்றதுணை நீயன்றி
மறக்காத நெஞ்சம் மஞ்சம் மறுதலித்தேன்
நிறைந்தாய் நீயென் நெஞ்சில் நீங்காமல்
மறைத்தாய் உன்காதலை மறுத்தாய் உதடுகளால்

கண்கள் கொண்ட பயன்உன்னை காணுதற்கே
எண்ணும் எண்ணம் யாவும் உன்பொருட்டே
விண்ணும் மண்ணும் அளந்தாலும் அதனிலும்
பெண்ணே பெரிதுகாண் என்காதல் உள்ளம்

உருகுகிறேன் உனது அருகாமை வேண்டி
மருகுகிறேன் நினது நிழலை நாடி
கருகுகிறேன் நமது காதல் இன்றி
பெருகிடும் காதலில் துவளும் உள்ளம்


உன்னையன்றி உணவும் உட்செலாது நிற்க
தன்னை மறந்தவனாய் தனித்து இருக்கின்றேன்
மென்மையின் மறுபெயர் பெண்மை என்றால்
என்னை இவ்வண்ணம் வதைத்தல் ஏன்செய்தாய்?

கதைக்கின்றேன் என்றாய் காதல்நான் சொன்னால்,
பதைக்கின்றேன் நான் காதலிலோர் பைத்தியமாய்
உதைபட்ட நெஞ்சமொன்று உடைந்தது உன்னால்,
வதைபட்டு வாடியது தன்னால் என்றறிவாயோ?

வாடிய செடியாய் நானிங்கு தனியனாய்
தாடி வளர்க்கவில்லை தனிமைத் தவம்மட்டும்.
நாடி நான்வருவேன் நல்லாளே நீயும் நான்
தேடிவரும் காதலை தட்டாமல் தந்திடுவாய்.




2 Comments:

Blogger SP.VR. SUBBIAH said...

காதலை நன்குசொன்னீர் கவலை எதற்கு ?
காரிகை வந்திடுவாளும் கரம் பிடிப்பதற்கு !

2:44 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி திரு சுப்பையா அவர்களே

இக்கவிதை பிரிவாற்றாமையை குறிக்கவே..

9:09 PM  

Post a Comment

<< Home