Monday, May 21, 2007

மரணத்தை வேண்டுகிறேன்

சில வார்த்தைகள் உதிர்ந்தன
என் வாய் தவறி...
வார்த்தைகளை பிடித்துக்கொண்டாய்...

பிய்த்தெறிந்தாய் என்னை
பஞ்சு பஞ்சாய்...
உன் வார்த்தைகளால் என்னை
தீயிட்டாய்...

மன்னிப்புக் கேட்டும்
மன்னிக்கவில்லை நீ...
வெந்து சாம்பலானது என் உள்ளம்...

உன் காதலை வேண்டிய நான்
இன்று மரணத்தை வேண்டுகிறேன்.

Thursday, December 28, 2006

கோபம் கொண்டவள்.....

புயலடித்து ஓய்ந்திருந்தது...

கோபத்தில் வந்த வார்த்தைகளை
கொட்டித் தீர்த்திருந்தாய்...

பதில் எதுவும் சொல்லாமல் நான்..
எனது பதில்கள் உனது
கோபத்தில் நெய் வார்க்கும் என்பதை நானறிவேன்..


கோபத்தில் நீ கலைத்து போட்ட
புத்தகங்களை எடுத்து அடுக்கினேன்..

அமைதியாய் என்னை பார்த்து
கொண்டிருந்தாய்...

உனது விசும்பல்..
உனது விழிநீர்..

தாங்காத எனது மனம்..
உனது அருகில் வந்து
தோளில் கை வைத்தேன்..
தட்டி விட்டாய்..

மீண்டும் ஒரு முறை
மறுதலிக்கப்பட்டது எனது கை..

மூன்றாம் முறை.......
இம்முறை எனது கைகளை விலக்கவில்லை..
பற்றிக் கொண்டாய்..

மெல்ல தோள் சாய்ந்து
மீண்டும் அழ ஆரம்பித்தாய்..

தேற்றத் துவங்கினேன் நான்...

எதற்காக சண்டையிட்டோம் என்பதை
இருவருமே மறந்து போனோம்.



Wednesday, December 20, 2006

கணைகள் ஏனடி நீ தொடுத்தாய்





வீழ்ந்து கிடக்கின்றேன்
வில் ஏன் கொணர்ந்தாய்..
என்னை வென்றவள் நீ..
அன்பால் அடிபணிந்தேன்..

என்னை அழிக்க
உன் அழகு போதும்..
அம்புகளால் என் செய்வாய்.

உன் புருவ நெறிப்பில்
புலம் பெயர்ந்தது என் இதயம்
ஆயுதம் தரித்து
நீ புரியக்கூடியது யாது.
கூரிய விழியம்பு போதாதா.
வில்லம்பு ஏன் விடுத்தாய்.

காதலால் விழ காத்திருக்கிறேன்
கணைகள் ஏனடி நீ தொடுத்தாய்.

வெள்ளுடை தேவதையே
உள்ளம் கொள்ளை கொண்டாய்.

வேறு எது கொள்ள
எண்ணம் படைத்தாய்.

அழகே உனக்கு அபயம் நான்.
அருள் கூர்ந்து அன்பு செய்வாய்.

Monday, December 18, 2006

காணாமல் தேடும் கண்கள்



காத்திருத்தலில் கரையும் காலம்
தொலைவில் நீ...
பார்த்திருக்கிறேன் நீ வரும் வழியை..
எனது விளக்கு எரிந்து
கொண்டிருக்கிறது..
நீ வந்து அணைப்பதற்காய்.

உனது தாமதம்
கோபம் சேர்த்தது எனக்கு..
அடுத்த நிமிடம் காரணம்
கற்பித்து சமாதானம்

கொள்ளும் ஓர் மனம்..
ஏதேனும் உனக்கு உற்றதோ
என்று அலறும் ஓர் மனம்..

நேரம் செல்ல
பதற்றம் மட்டும்..
காணாமல் தேடும்
கண்கள்..

நேரம் தவறி வந்து
சேர்ந்தாய்..
உன் முகம் கண்டதும்
முகத்தில் தோன்றிய

ஒரு புன்னகை,
மறுகணம் மறைத்தேன்..

காக்க வைத்து
அலைக்கழித்த உன் மேல்
பொங்கிய கோபம்..
குறும்பன் நீ..
கோபத்தையும் சேர்த்தணைத்தாய்.


Tuesday, December 12, 2006

கதைக்கின்றேன் என்றாய்.......

உறக்கம் கொள்ளவில்லை உற்றதுணை நீயன்றி
மறக்காத நெஞ்சம் மஞ்சம் மறுதலித்தேன்
நிறைந்தாய் நீயென் நெஞ்சில் நீங்காமல்
மறைத்தாய் உன்காதலை மறுத்தாய் உதடுகளால்

கண்கள் கொண்ட பயன்உன்னை காணுதற்கே
எண்ணும் எண்ணம் யாவும் உன்பொருட்டே
விண்ணும் மண்ணும் அளந்தாலும் அதனிலும்
பெண்ணே பெரிதுகாண் என்காதல் உள்ளம்

உருகுகிறேன் உனது அருகாமை வேண்டி
மருகுகிறேன் நினது நிழலை நாடி
கருகுகிறேன் நமது காதல் இன்றி
பெருகிடும் காதலில் துவளும் உள்ளம்


உன்னையன்றி உணவும் உட்செலாது நிற்க
தன்னை மறந்தவனாய் தனித்து இருக்கின்றேன்
மென்மையின் மறுபெயர் பெண்மை என்றால்
என்னை இவ்வண்ணம் வதைத்தல் ஏன்செய்தாய்?

கதைக்கின்றேன் என்றாய் காதல்நான் சொன்னால்,
பதைக்கின்றேன் நான் காதலிலோர் பைத்தியமாய்
உதைபட்ட நெஞ்சமொன்று உடைந்தது உன்னால்,
வதைபட்டு வாடியது தன்னால் என்றறிவாயோ?

வாடிய செடியாய் நானிங்கு தனியனாய்
தாடி வளர்க்கவில்லை தனிமைத் தவம்மட்டும்.
நாடி நான்வருவேன் நல்லாளே நீயும் நான்
தேடிவரும் காதலை தட்டாமல் தந்திடுவாய்.